விஜய்யின் அரசியல் பாட்டு
2 July 2009 தமிழ்சினிமா
களத்துல இறங்குவதென முடிவெடுத்துவிட்ட விஜய் தனது படத்தின் பாடல்களிலும் அரசியல் ’பஞ்ச்’ அடிக்க தொடங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் விஜய். அதன் முதல் ஸ்டெப்தான் எம்.ஜி.ஆர் பட தலைப்புகளாக தேடிப்பிடிப்பது. வேட்டைக்காரன்,உரிமைக்குரல்,என பட்டியல் நீளத் தொடங்கியிருக்கும் நிலையில் பாடல்களிலும் புரட்சித்தலைவர் பாணி இருக்க வேண்டுமென கவிஞர்களுக்கு அன்புகட்டளையிட்டுள்ளாராம். அரசியல், தத்துவம், புத்திமதி எல்லாம் கலந்து கதம்பம் கட்டிய பாடல் ஒன்றை விஜய்க்காக எழுதியுள்ளார் கபிலன். ‘வேட்டைக்காரன்’ படத்தில் அப்பாடலை பயன்படுத்துகிறார் விஜய்.
“வறட்டி தட்டும் சுவத்துல
வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப்போட்டு
கருத்துப்போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்மநாட்டு நடப்புல
யாரும் இதைத் தடுக்கல”
என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஸ்டைலிலேயே ஆடி நடிக்கிறாராம் இளையத்தளபதி. புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டாலும் பூனை சவுண்டு ‘மியாவ்’தான்!
எவரும் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது – சிவநாதன் கிஷோர்
2 July 2009 செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினராகவே எதிர்காலத்தில் செயற்பட உள்ளதாகவும், எவராலும் தன்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சி நிர்வாகம் தம்மிடம் எந்த விளக்கத்தையும் கோர முடியாது எனவும், கட்சிக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவாமல் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியிலிருந்து எவ்வித பதவிகளையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், அவ்வாறு பதவிகளைப் பொறுப்பேற்றிருந்தால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தம்மிடம் எவ்வித விளக்கமும் கோரவில்லை என சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள்- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
2 July 2009 செய்திகள்
வவுனியா நகரசபையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுவோரின் விருப்பு இலக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆரோக்கியதாஸ் தர்சன் 01, முன்னாள் வவுனியா நகரபிதா விசுபாரதி என்கிற தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் 02, கந்தசாமி பார்த்தீபன் 03, சண் மாஸ்டா என்கிற கணணி பயிற்சி முகாமையாளரான கந்தசாமி சண்முகதாசன் 04, கம்லத் செரின் நிரூஷன் 05, கிட்டு நாகலிங்கம் 06, கமநல அபிவிருத்திச் சங்கத் தலைவர் யோகன் என்கிற தர்மலிங்கம் யோகராஜா 07, துரைராசா சுகந்தராசா 08, திருநாவற்குளம் மாதர்சங்கத் தலைவியும், அம்மா பகவான் சபை தலைவியுமான நகுலேஸ்வரம்பிள்ளை சோதிமதி 09, கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் விஜயகுமார் யோயல் நிரோஷன் 10, சிவபதி ருஷாந்த் 11, ஆட்டோ சங்கத் தலைவர் சிவலிங்கம் ரவீந்திரன் 12, முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினரும் சஜீஸ் கூல்பார் உரிமையாளரும் சுந்தரம் குமாரசாமி 13, சிவம் என்கிற சுப்பையா ஜெகதீஸ்வரன் 14, தனியார் பேருந்து சங்கத் தலைவரும், வடதாரி விளையாட்டுக் கழகத் தலைவருமான சுவாம்பிள்ளை தேவ கிங்ஸ்லி ராஜேஸ்வரன் 15 என விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
விமான விபத்தில் உயிர்தப்பிய சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம்
2 July 2009 செய்திகள்
இந்து சமுத்திரத்தின் எல்லையில் விபத்துக்குள்ளான யெமன் விமானத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய 14 வயது சிறுமியின் உடல் நிலை கவலைப்படுமளவிற்கு இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் கூறினர். நேற்று முன்தினம் யெமனிலிருந்து கெமரூன் நோக்கிப் பறந்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 152 பேரில் 14 வயதுச் சிறுமி மாத்திரம் உயிர் தப்பினார். ஏனையோர் உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தோரை மீட்கவும் விமானத்தைக் கரை சேர்க்கவும் மீட்பு பணியாளர்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். விமான உதிரிப்பாகங்கள், சடலங்கள் என்பன விபத்து நடந்த பகுதியில் கிடப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய்க் கசிவு வெளிவருவதால் விமானத்தின் எரிபொருள் தாங்கி உடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மீட்ட பணியாளர் பிரான்ஸ் வானொலிக்கு சம்பவத்தை விவரித்தார். சிறுமியொருவர் தண்ணீரில் நீந்தியவாறு தள்ளாடினார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு கனடாவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ புகலிடம் வழங்கலாம்: ஜனாதிபதி
2 July 2009 செய்திகள்
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கனடாவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ புகலிடம் வழங்குவது பற்றித் தான் அக்கறை கொள்ளவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், உள்நாட்டு மோதல்களால் இடம்பெயர்ந்து நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளை இலங்கைக்கு அழைக்கவிருப்பதால், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் புகலிடம் கோர அனுமதிக்கக் கூடாதெனவும் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி கூறினார். “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் எத்தனை பேரையாவது ஏற்றுக்கொள்ளத் தயாரெனக் கனடா கூறியுள்ளது. இந்த நாடுகள் நலன்புரி முகாம்களுக்குள் அலுவலகங்களை அமைத்து அங்கிருந்தே இடம்பெயர்ந்த மக்களுக்கு வீசா வழங்கினாலும் நான் கவலைப்படவில்லை” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேநேரம், சில தூதரகங்கள் இலங்கைக்கு எதிராகப் பிழையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்த ஆரம்பித்திருப்பதுடன், சில இலங்கையர்களுக்கான வீசா அனுமதிகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

க.பொ.த உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வெளிவரும்
2 July 2009 குறுஞ்செய்தி
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இவ்வருடத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் நாளை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது. இவ்வருடம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார். நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2009ஆம் ஆண்டுக்கான பாடவிதானங்கள் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறீலங்காவின் இனப் படுகொலைகளை விசாரிக்க விசாரணை ஆணையம்
2 July 2009 செய்திகள்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. தடை முகாம்களில் வாழும் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க செயல் இயக்குநர் லாரி கோக்ஸ், த கார்டர் நிலையத்தின் மனித உரிமை பிரிவு இயக்குநர் கரீன் ரையன், சுதந்திர இல்லம் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெனிபர் வின்ட்சர், அனைத்துலக மனித உரிமை குழுவின் தலைவர் ராபர்ட் அர்சனால்ட், மனித உரிமை மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பெலிஸ் டி.கேர், மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங் டொனாக்கே ஆகியோர் இது தொடர்பாக விரிவான மனு ஒன்றை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் வரும் 4ம் திகதி வரை நீடிப்பு
2 July 2009 குறுஞ்செய்தி
கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை களைவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. கிழக்கு வாழ் முஸ்லிம்கள் விடுத்த வேண்டுகோளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை களைவதற்கான காலம் எதிர்வரும் நான்காம் திகதி 3.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காத்தான்குடியில் இயங்கி வந்த குறித்த முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஒரே நேரத்தில் ஆயுதங்களை களைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தஞ்சம் கோரும் வெளிநாட்டவர்களுக்கான ஜப்பான் புதிய சட்ட வரைவு
2 July 2009 செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரில சட்டவிரோதமாக உள்நுழைபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து கடந்த இரண்டு ஆடுகளில் மாத்திரம் 1180 பேர் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகவும், அவர்களில் 57 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் ஜப்பான் கிளையின் அகதிகள் விவகாரத்திற்கான அதிகாரி டொமோகோ இசீ இது தொடர்பான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், ஜப்பானின் குடிவரவு சட்ட அமைச்சினால் சட்ட வரைவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்ட வரைவின் படி, சட்ட விரோதமான முறையில் ஜப்பானில் குடியேறியிருப்பவர்கள், அதிகரித்து வரும் அரசியல் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை, வீசாக் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் நாட்டில் தங்கியுள்ளவர்கள் என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வில் அக்கறை செலுத்தினால் வரலாறு காணாத போராட்டத்தை நடத்துவோம்: தேசிய பிக்கு முன்னணி எச்சரிக்கை
2 July 2009 செய்திகள்
தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரச தலைவருமே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதியும் கடந்த கால அரச தலைவர்களைப்போல் செயற்படாமல் அதிகாரப் பகிர்வு என்ற இடத்தில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக கூறவேண்டும். இல்லையேல்….. வரலாறு காணாத போராட்டத்தினை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்று தேசிய பிக்கு முன்னணி எச்சரித்துள்ளது. தமிழீழத்தை சட்டபூர்வமாக வழங்குவதாக இருந்தால் புலிகளை ஏன் அழிக்கவேண்டும்? இராணுவ வீரர்களை யுத்தத்திற்கு பலியாக்காமலேயே பிரபாகரனிடம் தமிழீழத்தை கையளித்திருக்கலாம் எனவும் தேசிய பிக்கு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று புதன்கிழமை கொழும்பு குணசிங்கபுர பூர்வாராம விகாரையில் நடைபெற்ற தேசிய பிக்கு முன்னணியின் விசேட மாநாட்டில் தலைவர் தம்பர அமில தேரர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

“நான் குடிகாரனல்ல’ புலம்புகிறார் அன்ட்ரூ சைமண்ட்ஸ்.
1 July 2009 செய்திகள்
நான் குடிகாரன் அல்ல. இருப்பினும், நான் செய்தது சரி என்று சொல்லவில்லை’ என்றார் சைமண்ட்ஸ். அவுஸ்திரேலிய அணியின் சர்ச்சைக்குரிய சகலதுறை வீரர் அன்ட்ரூ சைமண்ட்ஸ், அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் இவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பாக அளவுக்கு அதிகமாக மது அருந்திய இவர் பயிற்சிகளில் பங்கேற்கவில்லை. இதனால், அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தவிர, அவுஸ்திரேலிய அணியின் ஒப்பந்தப் பட்டியலிலும் சைமண்ட்ஸின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்த சைமண்ட்ஸ் கூறுகையில், எப்போதாவது மது அளவுக்கதிகமாகக் குடிப்பதுண்டு. இருப்பினும், நான் மதுவுக்கு அடிமை இல்லை. மாறாக பொழுது போக்கிற்காக எப்போதாவது மது அருந்தும் பழக்கம் எனக்குண்டு. உலகக் கிண்ணத் தொடருக்கு முன் மது அருந்திய பிரச்சினையில் சிக்கியது வருத்தமளித்தது. அணியிலிருந்து நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. தற்போது தான் அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கிறேன். அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டுப் பிறரிடமும் தகராறு செய்வது, அணியின் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட செயல்களுக்காக வருந்துகிறேன். இதுபோன்ற நெருக்கடிகள் இனி யாருக்கும் வரக்கூடாது’ என்றார்
நாட்டையும் மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுக்க இடமளியோம் - ஜனாதிபதி
1 July 2009 செய்திகள்
பாதுகாப்பு படையினருடன் இணைந்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள நாட்டையும், நாட்டு மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். ஸ்ரீ.ல.சு.கட்சி எப்போதும் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னிறுத்தியே முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்து வந்திருக்கிறது. அதேவேளை அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் நோக்கில் ஒரு போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுத்தது கிடையாது. நாடு தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் உரிய நேரகாலத்தில் எடுக்கப்படும். இவ்விடயத்தில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களை மீட்க முயற்சி!
1 July 2009 செய்திகள்
இந்தியா தடுத்து வைத்துள்ள 107 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 21 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் கங்கிரஸ் கட்சித் தலைவரும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான தொண்டமான், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் உடன் இருந்தார். மேலும் இலங்கை நிலவரம் குறித்தும், தமிழர் பிரச்சினை குறித்தும் தொண்டமான் முதல்வருடன் பேசினார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகள், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குறித்தும் இதளன்போது விவாதிக்கப்பட்டது. வன்னிப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி தொண்டமானிடம் கேட்டறிந்தார். சில நாட்களுக்கு முன் சென்னை சென்ற தொண்டமான் கனிமொழியைச் சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரை அவர் நேற்று சந்தித்தார
சூரிச் மாநகரில் மாபெரும் வீரமக்கள் தின நிகழ்வும், மாணவர்களுக்கான பரிசளிப்பும்!!
1 July 2009 செய்திகள்
புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 05.07.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெறுவதுடன், இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளது. அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி இசைக்கு ஆடுதல், வினோதவுடைப் போட்டி, பொது அறிவுப்போட்டி, நாடகம், நாட்டியம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மற்றும் அண்மையில் சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81
வீரமக்கள்தின நிகழ்வு நடைபெறும் மண்டபம்.
GemeinsSchfts Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich
நன்றி.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் -சுவிஸ்கிளை
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ்.
1 July 2009 இந்தியசெய்திகள்
இந்திய வெளியுறவுத்துறை செய்லாளராக இருக்கும் சிவசங்கரமேனன் இன்றுடன் (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார். அந்த இடத்திற்கு நிரூபமா ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். 1973‐ல் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்து கொண்ட இவர் மிக முக்கிய ராஜதந்திர பதவிகளை வகித்தவர் என்பதோடு சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்ற பிம்பமும் நிரூபமா மீது உண்டு. இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக கொழும்பில் பணியாற்றிய பிறகு அந்த இடத்திற்கு அலோக் பிரசாத்தைக் கொண்டு வந்த இந்தியா, நிரூபமாவை சீனாத் தூதராக அனுப்பியது. ஆனால் அதே நேரம் மும்பை தீவீரவாத தாக்குதல், இலங்கை போர், பாகிஸ்தானுடன் முறுகல் நிலை, இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் போன்ற விஷயங்களில் சிவசங்கரமேனனின் மீது நாடு முழுக்க உள்ள ராஜதந்திரிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரச்சனைகளை மந்தமாக அணுகினார் என்றும் தந்திரங்களைக் கையாளத் தெரியாதவர் என்றும் விமர்சிக்கப்பட்டார் மேனன்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 3 மாநகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீ.சு.கட்சியில் இணைவு
1 July 2009 குறுஞ்செய்தி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) கட்சியின் மேலும் மூன்று மாநகரசபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து தாம் பதவி விலகுவதாக குறித்த மூன்று மாநகரசபை உறுப்பினர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது கட்சி ஓர் ஜனநாயகக் கட்சி எனவும், எவரம் சேரலாம், எவரும் விலகிக் கொள்ளலாம் எனவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: செ. பத்மநாதன் கோரிக்கை
1 July 2009 செய்திகள்
இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கோரியுள்ளார். இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிக்கடாவாகி விட்டோம். இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.

விசாரணைக்காக பிரபாகரனின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்
1 July 2009 செய்திகள்
பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று இராணுவத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: வவுனியா “நலன்புரி முகாமில்” தங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 76) மற்றும் அவரது மனைவி வேலுப்பிள்ளை பார்வதி (வயது 71)ஆகிய இவ்விருவரும் கடந்த மாதம் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டனர். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து இரகசியமான முறையில் தப்பி வந்துள்ள இவர்கள் வவுனியாவிலுள்ள “நலன்புரி நிலையத்தில்” தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.

வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், பலர் காயம்
1 July 2009 செய்திகள்
செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இவ் முள்கம்பிகளுக்குள் ஒரு உள்புகும் வழியை அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து வந்தார்கள்.இப்படியான உள்புகும் பாதை அமைக்கப்பட்ட போதெல்லாம், மக்களை இரண்டு முகாம்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அது பின்பு அடைக்கப்பட்டு வந்தது.


